p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Tuesday, June 29, 2004

முழுமதி எழுந்தது

கண்ணியமாகவே விண்ணை; நற்
கற்புடன் இருத்திட துகிலென முகில்கள்
எண்ணிய வடிவிலே வந்து; விண்ணில்
எழுந்துமே எழிலுற்றுப் பரந்தனதானே
கண்களை மூடிடும் போது; வரும்
கருநிற நிலையினை உணர்வது போலே
விண்ணெலாம் காரிருள்தானே; அதில்
வீசிடும் ஒளியுடன் மலர்வகைதானே

ஓடி ஒளித்தது சூரியன்; எங்கும்
ஒளியை மறைத்து எழுந்தது இருள்மயம்
நாடி வந்தன கூட்டினை; பறவைகள்
நானிலம் சுற்றியே இருப்பிடம் திரும்பின
வாடிய வயிற்றினால் அலரிய குழவிபோல்
வந்தொரு ஆந்தையும் அலறிற்று; குழறிற்று
மூடிய அவள்முகம் திறந்தது போலவே
முழுமதி வானிலே எழுந்தது; பிறந்தது.

Sunday, June 27, 2004

உதிரமான தமிழ்

உள்ளத்தின் உணர்வு நீயே
ஓடுகின்ற உதிரம் நீயே
வள்ளுவனின் குறளும் நீயே
வார்த்தையின் வாக்கும் நீயே
மெல்லவரும் காற்றும் நீயே
மேதினியின் அசைவும் நீயே
வெள்ளத்தின் வேகம் நீயே
வெற்றியெனும் நாதம்நீயே

மலர்களின் மணமாய் உள்ளாய்
மாசற்ற நிறமாய் உள்ளாய்
நலமான வாழ்வாய் உள்ளாய்
நல்லதோர் உறவாய் உள்ளாய்
நிலங்களின் பசுமையில் உள்ளாய்
நிலாவின் ஒளியில் உள்ளாய்
கலங்காத நீரில் உள்ளாய்
கன்னியர் கற்பில் உள்ளாய்

மலைகளின் அழகும் நீதான்
நதிகளின் வண்ணம் நீதான்
அலைகளின் ஓசை நீதான்
அழகான இயற்கை நீதான்
கலைகளின் தோற்றம் நீதான்
காதலின் சுவையும் நீதான்
நிலையான இன்பம் நீதான்
நிரந்தரப் பொருளும் நீதான்

வானத்தை உன்னில்க் கண்டேன்
வளம்மிக்க தோற்றம் கண்டேன்
மானத்தின் தன்மை கண்டேன்
மகத்தான வீரம் கண்டேன்
தானத்தின் வடிவைக் கண்டேன்
தமிழரின் உணர்வைக் கண்டேன்
கானத்தின் இனிமை கண்டேன்
கன்னித்தமிழ்க் கவிதை கண்டேன்

அன்பான உருவமாக
அசையாத வடிவமாக
இன்பத்தின் தோற்றமாக
இதமான வருடலாக
மன்னவர் மகுடமாக
மாணிக்க மணியுமாக
நின்னையே எங்கும் கண்டேன்
நிரந்தரத் தன்மையாக.

Thursday, June 24, 2004

பயமெதற்கு

நாசியிலே நீரிருக்கு

நலமுடனே தமிழிருக்கு

வீசுகின்ற காற்றிருக்கு

விண்ணிருக்கு பயமெதற்கு

Monday, June 21, 2004

உருக்கம்

கள்ளத் தனமற்ற சிரிப்பினிலே - உந்தன்

கனிந்தநற் குணங்களை கண்டேன்

வெள்ளை மனம்படைத்த நெஞ்சத்தை - உந்தன்

வேல்விழி இரண்டிலும் யான்கண்டேன்

மெல்ல விரிந்திடும் உதட்டழகில் - உந்தன்

மேன்மைகொள் செயல்களைக் கண்டேன்

உள்ளம் உருக்குமுன் உடலழகால் - நான்

உருகிப்போனதை நீ கண்டாயோ?

Thursday, June 17, 2004

ஒளிகொண்ட அன்பு

குண்டடி பட்டொரு தேசம்- இன்று
குற்றுயி ராகக் கிடக்குது பாரீர்!
கண்ட இடமெல்லாம் குண்டை - ஒரு
கருத்தின்றி இறைத்திடும் விந்தையைப் பாரீர்!
அண்டை நாடுகள் எதிர்க்க - பல
ஆயிரம் ஆயிரம் மக்களும்தடுக்க
மண்டை விறைத்தவ ரானார் - சிலர்
மனித நேயத்தை மறந்துமே போனார்

அன்பை உணர்த்துமா யுத்தம்? - பல
ஆயிரம் உயிர்களை அழித்திடும் யுத்தம்
தன்னலம் பேணிடும் யுத்தம் - ஒரு
தனியினம் இல்லாமற்ப் போக்கிட யுத்தம்
கன்னியர் தவித்திட யுத்தம் - அவர்
கனவுகள் எல்லாம் சிதைத்திடும் யுத்தம்
சின்னஞ் சிறார்களில் இரத்தம் - பலர்
சித்திர வதைப்பட்டுச் செத்திடும் யுத்தம்

கலிகாலம் இங்கு பிறந்ததோ? - எங்கும்
கரிகொண்ட தேசத்தை யுத்தம் கொடுத்ததோ?
அழித்திட எரித்திட மகிழும் - ஓர்
அவாக்கொண்ட அரக்கனாய் மாறியேவிட்டதோ?
பலிஒன்றும் வேண்டாம் எமக்கு - இனி(ப்)
பாவங்கள் பகைமைகள் வேண்டவே வேண்டாம்
ஒலிஒன்றே கேட்டிட வேண்டும் - அது
ஒளிஒன்றால் அன்பென்று உதித்திடவேண்டும்.

Sunday, June 13, 2004

'டமில்' நண்பர்

வெளிநாட்டு நண்பர்

வெளிக்கிட்டார் ஊருக்கு


ஊரிலே,

'மம்மி' என்று தாயை மனமுவந்து அழைத்திட்டார்

'டடி' என்று தந்தை கால்களில் விழுந்திட்டார்

'சிஸ்டர்' என்றார் 'பிறதர்' என்றார்

'அங்கிள்', 'அன்ரி' என்று அழைத்து மகிழ்ந்திட்டார்


பெருமையாய்த் தாய் சொன்னாள்

'கனகாலம் வெளிநாட்டில் இருந்ததினால்

தமிழை அவன் மறந்திட்டான்'
என்று


அந்நேரம்,

இவனை யாரென்று அறியாத

விதியொன்று வீட்டு நாயுருவில்

பாய்ந்ததிவன் பக்கம்


'ஆச்சி நாயை பிடியணை' என்று

ஐயோ அம்மா சொல்லி அழைத்திட்டான்

போச்சு அவன் ஆங்கிலம்

புகுந்தது தமிழ்மொழி.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது