p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Thursday, June 17, 2004

ஒளிகொண்ட அன்பு

குண்டடி பட்டொரு தேசம்- இன்று
குற்றுயி ராகக் கிடக்குது பாரீர்!
கண்ட இடமெல்லாம் குண்டை - ஒரு
கருத்தின்றி இறைத்திடும் விந்தையைப் பாரீர்!
அண்டை நாடுகள் எதிர்க்க - பல
ஆயிரம் ஆயிரம் மக்களும்தடுக்க
மண்டை விறைத்தவ ரானார் - சிலர்
மனித நேயத்தை மறந்துமே போனார்

அன்பை உணர்த்துமா யுத்தம்? - பல
ஆயிரம் உயிர்களை அழித்திடும் யுத்தம்
தன்னலம் பேணிடும் யுத்தம் - ஒரு
தனியினம் இல்லாமற்ப் போக்கிட யுத்தம்
கன்னியர் தவித்திட யுத்தம் - அவர்
கனவுகள் எல்லாம் சிதைத்திடும் யுத்தம்
சின்னஞ் சிறார்களில் இரத்தம் - பலர்
சித்திர வதைப்பட்டுச் செத்திடும் யுத்தம்

கலிகாலம் இங்கு பிறந்ததோ? - எங்கும்
கரிகொண்ட தேசத்தை யுத்தம் கொடுத்ததோ?
அழித்திட எரித்திட மகிழும் - ஓர்
அவாக்கொண்ட அரக்கனாய் மாறியேவிட்டதோ?
பலிஒன்றும் வேண்டாம் எமக்கு - இனி(ப்)
பாவங்கள் பகைமைகள் வேண்டவே வேண்டாம்
ஒலிஒன்றே கேட்டிட வேண்டும் - அது
ஒளிஒன்றால் அன்பென்று உதித்திடவேண்டும்.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது