p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Thursday, August 18, 2005

தெய்வம்?

மனித னென்றும் தெய்வ மாகலாம்
மாட்சிமை மிக்க வீர னாகலாம்
தனித்து வமுள்ள இறைவ னாகலாம்
தாரணி போற்றும் அறிஞ னாகலாம்
புனித மானதோர் கடவு ளாகலாம்
பொறுமை யிலிந்தப் பூமி யாகலாம்
கனிகொ டுத்திடும் விருட்ச மாகலாம்
கல்வி தந்திடும் குருவு மாகலாம்

துன்ப முற்றவர் துயர் துடைக்கலாம்
தூய சிந்தனை தனைவ ளர்க்கலாம்
அன்பு கொண்டுமே உதவி செய்யலாம்
அரவ ணைத்துமே மகிழ்ச்சி காணலாம்
தன்ன லமிலா தெங்கும் வாழலாம்
தாழ்ச்சி யுற்றவர் விழிது டைக்கலாம்
என்றும் யாவர்க்கும் துணையு மாகலாம்
இறைவ னாகவே மனித னாகலாம்

மற்றவர் பொருட்களில் ஆசை கொள்வதும்
மந்திக ளாக வீதியிற் செல்வதும்
கற்றது போல நடக்கா திருப்பதும்
கண்ட வார்த்தைகள் கதைத்துத் தொலைப்பதும்
குற்ற மனத்துள் மாய்ந்து கிடப்பதும்
குறுகு றுத்துப் பொறாமை கொள்வதும்
அற்றவ னாக இருப்பவன் எவனோ
அவனே என்றும் தெய்வ மாகிறான்

மனிதனாய்க் 'கண்ணன்' பிறக்க வில்லையா?
மாபெரும் தெய்வமாய் விளங்க வில்லையா?
தனிப்பெரு மரசாய்ப் 'புத்தர்' இல்லையா?
தரணியை யாட்சி செய்ய வில்லையா?
புனிதராய் 'யேசு' தோன்ற வில்லையா?
புகழுடன் 'ந்பிகள்' வாழ வில்லையா?
இனியவர் பலபேர் மனித ரானவர்
இறைவ னாகவே மாற வில்லையா?

நட்பால் மனிதனும் தெய்வ மாகலாம்
நீதிநேர் மையாய் வாழ்ந்து கொள்ளலாம்
எட்டுத் திக்கிலும் உதவி செய்பவன்
என்றும் எங்கும் இறைவ னாகலாம்
பட்ட துன்பத்தை மறக்கச் செய்பவன்
பாரினி லென்றும் கடவு ளாகலாம்
கெட்ட சிந்தனை மறந்து நிற்பவன்
கருணை யினாலே வைய மாளலாம்

துன்ப முற்றவர் துயர் துடைப்பவன்
தூயவ னவன் தெய்வ மாகிறான்
இன்பம் தந்தொரு இன்னல் தீர்ப்பவன்
இன்றே இங்கே இறைவ னாகிறான்
தன்னினம் காக்கத் தன்னை யிழப்பவன்
தன்னல மற்ற கடவு ளாகிறான்
அன்புடன் எவர்க்கும் சேவை செய்பவன்
அவனி மீதிலே தெய்வ மாகிறான்.

(பூபாளராகங்கள் 2005)
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது