p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Saturday, September 19, 2009

சத்தியம்

சத்தியம் வென்றது காந்தியால் - இன்று
சாட்டுக்கள் சொல்லிடும் காந்திகள்
நித்தமும் தமிழுயிர் அழியுது - இது
நிதர்சனம் இல்லையா உலகிற்கு
முத்திய வெறித்தனம் இதுவெல்லோ - தமிழை
முழுமையாய் அழித்திடத் துடிக்கிறார்
வித்தகம் பேசிடும் நேரமா? - எம்
வீழ்வுதான் உனக்கு ஆகாரமா?

மௌனத்தைக் கலைத்திடு

வாடிக் கிடக்குது உறவுகள் - தமிழ்
வாழ்ந்த மண் இன்றித் தவிக்குது
ஆடி அலையுது உயிரெல்லாம் - எங்கும்
ஆக்கிரமிப்புப் போர் நடக்குது
நாடி நரம்பெல்லாம் ஓயுது - தமிழ்
நரகம் என்றொன்றை ஆக்குது
கூடி அழியுது தமிழினம் - எங்கும்
குற்றுயிர் ஓலமே கேட்குது

குருதியில் நனையுது தமிழ்நிலம் - எங்கும்
குழிகளுள்ப் பிணங்கள் குவியுது
கருகி யழியுது எமதுமண் இந்த(க்)
காட்சிகள் கண்களை வலிக்குது
உருகி அழைக்கிறோம் உலகினை - இந்த
உண்மையை உணர்த்தத் துடிக்கிறோம்
மருவி மறைந்துமே போவதேன் - தமிழ்
மகிழ்ந்திட மௌனத்தைக் கலைத்திடு

அடைபட்ட சமாதானம்

தடைபட்டுப்போன தமிழரின் நியாயங்கள்
விடையின்றி இன்று விம்மி அழுகிறது
புடைசூழும் எதிரியின் புயங்களின் இடையே
அடைபட்ட சமாதானம் அயர்ந்து தூங்குகிறது

பிசாசு

உணவிற்காய் இரைதேடும்
உண்மை நிலைமாறி
பிணத்திலே பசிதீரும்
பிசாசுதான் இராணுவம்

கூண்டுக்குள் தமிழர்

காட்சிப் பொருளானார்
கணப்பொழுதில் பாழானார்
மீட்சியின்றி வாழ்கின்றார்
மீட்பர்தான் வருவாரா?
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது