p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Sunday, June 27, 2004

உதிரமான தமிழ்

உள்ளத்தின் உணர்வு நீயே
ஓடுகின்ற உதிரம் நீயே
வள்ளுவனின் குறளும் நீயே
வார்த்தையின் வாக்கும் நீயே
மெல்லவரும் காற்றும் நீயே
மேதினியின் அசைவும் நீயே
வெள்ளத்தின் வேகம் நீயே
வெற்றியெனும் நாதம்நீயே

மலர்களின் மணமாய் உள்ளாய்
மாசற்ற நிறமாய் உள்ளாய்
நலமான வாழ்வாய் உள்ளாய்
நல்லதோர் உறவாய் உள்ளாய்
நிலங்களின் பசுமையில் உள்ளாய்
நிலாவின் ஒளியில் உள்ளாய்
கலங்காத நீரில் உள்ளாய்
கன்னியர் கற்பில் உள்ளாய்

மலைகளின் அழகும் நீதான்
நதிகளின் வண்ணம் நீதான்
அலைகளின் ஓசை நீதான்
அழகான இயற்கை நீதான்
கலைகளின் தோற்றம் நீதான்
காதலின் சுவையும் நீதான்
நிலையான இன்பம் நீதான்
நிரந்தரப் பொருளும் நீதான்

வானத்தை உன்னில்க் கண்டேன்
வளம்மிக்க தோற்றம் கண்டேன்
மானத்தின் தன்மை கண்டேன்
மகத்தான வீரம் கண்டேன்
தானத்தின் வடிவைக் கண்டேன்
தமிழரின் உணர்வைக் கண்டேன்
கானத்தின் இனிமை கண்டேன்
கன்னித்தமிழ்க் கவிதை கண்டேன்

அன்பான உருவமாக
அசையாத வடிவமாக
இன்பத்தின் தோற்றமாக
இதமான வருடலாக
மன்னவர் மகுடமாக
மாணிக்க மணியுமாக
நின்னையே எங்கும் கண்டேன்
நிரந்தரத் தன்மையாக.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது