p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Saturday, June 13, 2020

நிலை தளர்ந்தேன்

பன்னீரிற் குழைத்த சந்தனமே
பருகிட இனிக்கும் பழரசமே
என்னோடு இணைந்த இருதயமே
ஈடில்லையே உனக்கு இணையில்லையே

கரைந்தோடும் வெள்ளைப் பனிநானே
கண்டுன்னை அள்ள  அலையானேன்
இரைக்கெங்கும் சின்னக் கிளியானேன்
இடர்கொண்டேன் என்னுள் உனைக்கண்டேன்

தென்றலாய் வந்திடும் தேவதை  நீ
தேர்ந்திட்ட  அழகின் சாதனை நீ
உன்னெழில் பூத்திட்ட தாமரைகள்
உடற்சுளைகள் எல்லாம் தேன்வதைகள்

வெற்றிட மானது பூமியெங்கும்
விண்நோக்கிப் போகுது மழைத்துளிகள்
நிற்குது நிலையாகக் கோள்கள்எல்லாம்
நிலைதளர்ந்தேன் உன்னால் எனைமறந்தேன்

Sunday, March 18, 2012

அம்மா


அம்மா என்றவொரு சொல்லினுள்ளே
அகிலமெலாம் அதிசயத்து அடங்கிவிடும்
இம்மையிலும் மறுமையிலும் அன்னையின்றி
இங்குவொரு வாழ்வெமக்கு இருந்திடுமோ?
சும்மாவே உதவாத உலகத்திலே
சுகத்தைவிட்டு சுமைமறந்து சுமந்தவட்கு
சிம்மாசனம் வேண்டாம் அவள்மகிழ்ந்து
சிரிக்கவொரு வார்த்தையேனும் சிந்திவிடு

பாட்டுபாடித் தூங்க வைத்தாள் பசியெடுத்தால்
பதபதைத்து உணவூட்டும் பாசத்தோடு
போட்டிபோட எதுவுண்டு உலகத்திலே
பொறுமையுடன் வளர்த்ததெமைப் பெற்றவளே
ஏட்டறிவும் எழுத்தறிவும் போததென்று
உலகறிவும் நாமறிய வைத்து தாயால்
ஈட்டிய நற்சாதனையில் ஏதினைச்சொல்ல
ஈன்றவுன்னை மறந்திடுமா? இதயமென்றும்

Saturday, September 19, 2009

சத்தியம்

சத்தியம் வென்றது காந்தியால் - இன்று
சாட்டுக்கள் சொல்லிடும் காந்திகள்
நித்தமும் தமிழுயிர் அழியுது - இது
நிதர்சனம் இல்லையா உலகிற்கு
முத்திய வெறித்தனம் இதுவெல்லோ - தமிழை
முழுமையாய் அழித்திடத் துடிக்கிறார்
வித்தகம் பேசிடும் நேரமா? - எம்
வீழ்வுதான் உனக்கு ஆகாரமா?

மௌனத்தைக் கலைத்திடு

வாடிக் கிடக்குது உறவுகள் - தமிழ்
வாழ்ந்த மண் இன்றித் தவிக்குது
ஆடி அலையுது உயிரெல்லாம் - எங்கும்
ஆக்கிரமிப்புப் போர் நடக்குது
நாடி நரம்பெல்லாம் ஓயுது - தமிழ்
நரகம் என்றொன்றை ஆக்குது
கூடி அழியுது தமிழினம் - எங்கும்
குற்றுயிர் ஓலமே கேட்குது

குருதியில் நனையுது தமிழ்நிலம் - எங்கும்
குழிகளுள்ப் பிணங்கள் குவியுது
கருகி யழியுது எமதுமண் இந்த(க்)
காட்சிகள் கண்களை வலிக்குது
உருகி அழைக்கிறோம் உலகினை - இந்த
உண்மையை உணர்த்தத் துடிக்கிறோம்
மருவி மறைந்துமே போவதேன் - தமிழ்
மகிழ்ந்திட மௌனத்தைக் கலைத்திடு

அடைபட்ட சமாதானம்

தடைபட்டுப்போன தமிழரின் நியாயங்கள்
விடையின்றி இன்று விம்மி அழுகிறது
புடைசூழும் எதிரியின் புயங்களின் இடையே
அடைபட்ட சமாதானம் அயர்ந்து தூங்குகிறது

பிசாசு

உணவிற்காய் இரைதேடும்
உண்மை நிலைமாறி
பிணத்திலே பசிதீரும்
பிசாசுதான் இராணுவம்

கூண்டுக்குள் தமிழர்

காட்சிப் பொருளானார்
கணப்பொழுதில் பாழானார்
மீட்சியின்றி வாழ்கின்றார்
மீட்பர்தான் வருவாரா?

Friday, December 07, 2007

பெண்

கற்றறிந்தார் பெண்கள் தங்கள்
கரும் இருளை அகற்றினார்
சுற்றி வந்தார் விண்வெளியை(ச்)
சுழன்று வென்றார் போர்களில்
கொற்றவளாய் உள்ளார் நன்றாய்(க்)
குடும்பங்களைக் காக்கிறார்
பற்றறுந்து தவிக்கிறார்கள்
பிறந்த மண்ணைப் பிரிந்ததால்

அடுப்படியின் வாழ்வு நின்று
அகலக் கால் பதித்தனர்
எடுத்த வேலை எதுவெனினும்
எளிதாய் வெற்றி கண்டனர்
ஒடுக்க எண்ணும் தீயோர்தன்னை
ஓட ஓடத் துரத்தினர்
கடுக்கும் காதல் கண்ணைமூட(க்)
கனதி யுற்றார் வயிற்றிலே

அழகு மட்டும் பெண்களில்லை
அனைத்தும் பெண்கள் என்றனர்
உலகம் எல்லாம் உணரவைத்தார்
உண்மைப் பெண்கள் வாதத்தை
பழமை வென்றார் புதுமைகொண்டார்
பயத்தை நீக்கிச் சென்றிட
களவு உற்றார் கருகிநின்றார்
கயவர் செய்த பாவத்தால்

தலைகள் சுற்றும் விலையில்(ப்)
பெண்ணைத் தாரமாக்கும் தமிழரை
உலையில்ப் போட்டு உஷ்ணமாக்கத்
துணிந்தார் என்ற போதிலும்
சிலையாய் உள்ளார் சிற்பமானார்
சிறகொடிந்த பறவையாய்
விலைகள் கூறி அழகைவிற்கும்
விந்தை என்று அகன்றிடும்

Sunday, April 09, 2006

இளவேனிற் காலம்

இளவேனிற் காலம்
இதமான தாளம்
இதயமோ இனிக்கின்ற கோலம்

களவேது மின்றி
கருமிருள் குன்றி
காதலில் வாழ்வுற்றார் ஒன்றி

நிலமகள் பாட
அலைமகள் தேட
நிலவுடன் கூடிவிளை யாட

அழகான நாடு
அதிலொரு வீடு
அமைதி வாழ்வின்பத் தோடு

Monday, March 27, 2006

உன்னால் உறங்க முடிகிறதோ?

வானை மறைத்துமழை பொழிகையிலே
வருவதை உண்ர்த்த ஒலி தருகையிலே
ஊனை உருக்கும்குளிர் பிறக்கையிலே
உடலை வருத்தி நாம் உழைக்கையிலே
சேனை மண்ணைக் காக்கையிலே
செழிப்புடன் நல்யாழ் ஒலிக்கையிலே
பூனை போல்நீ உறங்குவதோ
புலியாய் மீண்டும் எழுதமிழா!

பகலை மறைக்கும் மைமுகில்கள்
பார்வை கெடுக்கும் மின்னல்நதி
நகலை ஒழிக்கும் நாகரீகம்
நாறி உலையும் மனிதநேயம்
அகல விரியும் ஆதிக்கம்
அதனை அழிக்க அரியபடை
பகலைப் பகலாய் இருத்திடவே
பருதி போல்நீ எழுத்மிழா!

மண்ணைக் காத்த மாவீரர்
மடிவை யெண்ணாப் போர்வீரர்
கண்ணை மூடா வேவுப்புலி
கவலை யற்ற கரும்புலிகள்
திண்மம் நிறைந்த கடற்பிரிவு
திறமை மிக்க வானெதிர்ப்பு
உண்மை யீழம் பிறக்கையிலே
உன்னால் உறங்க முடிகிறதோ?

Saturday, October 22, 2005

கதிரவன்

தங்குதடை யின்றி வரும்
தென்ற லொடு கூடி
கங்குலை விலக்கித் தமிழ்(க்)
குயிலி னிசை பாடி
பொங்கு மெழில் நங்கையென(ப்)
புதுப் பொலிவு காட்டி
எங்குமொளி பாச்சி யதை(த்)
திங்களுக் கும் ஊட்டி

ஞாலமது போற்று கின்ற
நல்ல பொற் கதிரே
காலமெலாம் வாழ்வு தரும்
கருணை யுள்ள உயிரே
கோலமது போடு கின்ற
வான வில்லின் முதலே
ஞாலமதைத் தோற்று வித்த
நா மறிந்த இறையே

மண்ணு மில்லை விண்ணு மில்லை
மா கடலு மில்லையே
எண்ண எண்ண அழகுதரும்
ஏது மிங்கு யில்லையே
உண்ணுதற் குணவு மில்லை
உழ வெதுவு மில்லையே
கண் கவரும் தாரணியின்
காதலனே வான் எழுவாய்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது