p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Sunday, January 23, 2005

காதலாலே!

கணப்பொழுது அதிகமடி கண்ணே உன்னைக்
கண்டு நான் கதைத்திட்ட காலம் சொல்ல

இமைப்பொழுது குறைந்ததடி எழிலெ உன்னை
என்றும் நான் என்னருகில் ஏற்கும்போது

மின்னுகின்ற நேரத்திலும் குறைவுதானே
மேதினியில் உன்னை நான் காணும் காலம்

என்னவளே! என்னுடலே! எந்தன் உயிரே!
என்றென்றும் நெஞ்சினிலே ஆடும் மயிலே!

கூவுகின்ற குயிலாகக் கண்டேன் உன்னைக்
கொஞ்சுகின்ற குழவியாகப் பார்த்தேன் நானும்

வீசுகின்ற தென்றலாக வருவாய் என்னுள்
விருந்தாகும் வளியாகச் சுழன்றாய் மூச்சாய்

சிறுவயதில் மழையழகை இரசித்ததுண்டு
சிறந்ததென்று வானவில்லை வியந்ததுண்டு

கொத்துக் கொத்தாய்ப் பூத்தமலர் பார்த்ததுண்டு
கொந்தளிக்கும் கடலழகில் கழித்ததுண்டு

எத்தனையோ அழகுகளைக் கண்டபோதும்
உன்னழகே தனியழகாய்க் கண்டுகொட்டேன்

நித்திரையில்ப் பிதற்றுகின்றேன் உந்தனாலே!
நிழல்போலேத் தொடர்கின்றாய் காதலாலே!

Saturday, January 08, 2005

புண்பட்ட தமிழ்

என்னை நான் வெறுக்கின்றேன் - இந்த
எளிய வாழ்வினை வாழ்வதனால்
தன்னலம் உள்ளவர்தான் - இங்கு
தமிழுக்காய் வாழ்வதாய் உரைக்கின்றார்
பொன்பொருள் இருப்பதனால் - அவர்
பெரும்பெரும் அறிஞராய்த் திகழ்கின்றார்
உன்னையே சரணடைந்தேன் - என்
உயிருடல் அனைத்தையும் உனக்களித்தேன்

கண்மணி வெற்றிடம்தான் - அது
கணம்தனும் மூடிடில் பார்வையுண்டோ?
மண்ணினுள் நீருளது - அதன்
மகத்துவம் அறியாது அலைவதைப்போல்
புண்பட்ட உரிருளது - இங்கு
புதுப்புது ஆற்றல்கள் புதைந்துளது
விண்ணிலே உளஇறையே! - உனை
விட்டிடில் எனக்கருள் எவர்தருவார்?

தமிழ்த் தாய்

பூத்திட்ட பொன் மகளே!

பூவினும் இனியவளே! - தமிழ்

காத்திட்ட நன்மகளே!

கன்னி மகளே! - அமிழ்து

ஊற்றினில் உதித்தவளே!

உயிரினில் நிறைந்தவளே! - உனை(ப்)

போற்றி வணங்குகின்றேன்

புகுந்தென்னுள் தமிழ்தருவாய்.

Wednesday, January 05, 2005

மன்னிப்பு இல்லை

எத்தனை ஷெல்கள் எல்லாம்
தாக்கியே நின்ற போதும்
எத்தனை தோட்டா இரவைகள்
துளைத்திட வந்த போதும்
எத்தனை விமானக் குண்டு
பாய்ந்துமே வீழ்ந்த போதும்
எத்தனை இரவு தன்னைப்
பயத்துடன் கழித்த போதும்

எத்தனை துன்பம் வந்து
பசித்திட இருந்த போதும்
நித்தமும் வறுமைக் கோட்டில்
வாழ்ந்துமே வந்த போதும்
இத்தனை அரக்கர் நின்றும்
தப்பிய மக்கள் கூட்டம்
செத்துமே மடியத் தானோ?
சிதைந்துமே அழியத் தானோ?

உறவினர் எங்கே? எங்கே?
உற்றத்தார் சுற்றம் எங்கே?
இருந்திட்ட மனைகள் எங்கே?
இதமான மரங்கள் எங்கே?
தரணியின் உயிரை மாய்க்க(ப்)
பிறந்திட்ட அலையே! நீயும்
சிறந்தவை இவைகள் என்று
சீண்டியே பார்த் தனையோ!

தாயில்லைப் பிள்ளை யுண்டு
தந்தைக்கு மகனு மில்லை
சேயில்லைத் தாயு முண்டு
சேர்ந்திட்ட துணையு மில்லை
காயில்லைக் கனியு மில்லை
பிஞ்சுடன் பூவு மில்லை
மாய்த்திடப் பிறந்த அலையே!
மன்னிப்பே உனக்கு இல்லை.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது