p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Monday, June 20, 2005

புத்தர் பெருமானின் புலம்பல்

கீதம் இசைக்கும் கருங்குயிலின் ஒலியமுதும்
நாதம் பரப்பும் நல்லியற்கை வனப்பதுவும்
வேதம் உரைக்கும் வெண்முகிலின் மனத்தவரும்
பேதம் இன்றிவரும் பக்தர்களின் பணிவிடையும்

நாளும் கேட்டதனில் நான்திழைத் திருக்கையிலே
பாழும் கொடுமனத்தோர் பறித்தனரோ? உரிமைதனை
வாழும் இடத்தைவிட்டு சந்திகளில் எனைநிறுத்தி
ஆளும் வர்க்கமென அடிமைகொள்ளத் துணிந்தனரோ?

சுட்டெரிக்கும் செஞ்சுடரோன் ஒளிப்பிளம்பு சுட்டெரிக்க
பட்டவுடன் பற்றிக்கொள்ளும் தூசியெலாம் பட்டுவிட
கெட்டதுர் நாற்றமெலாம் கிளம்புகின்ற வீதிகளில்
மட்ட மானவர்கள் மகிழயெனை நிறுத்தினரோ?

துன்பம் கண்டுள்ளம் துடிதுடித்து எழுந்தவன்யான்
மன்னன் முடிதுறந்து மகிழ்வுடனே இருந்தவன்யான்
என்னை முதற்படுத்தி என்சீடர் நீரெல்லாம்
சின்னத் தனமாக அரசியலில் அலைவதுவேன்?

ஒன்றும் புரியாத புதிரெல்லாம் புரிந்திடவே
தன்னம் தனியிருந்து தவமிருந்து உரைத்தவற்றை
நன்மைதரும் நல்லவற்றை நலியவிட்டு நஞ்சுடனே
உண்மை தனைமறந்து ஊதாரி யாவதுவேன்?

ஆளும் அரசிற்கு அறிவில்லை யென்றிருக்க
நாளும் எனைத்துதிக்கும் நன்றிகெட்ட சீடர்களே!
மாளும் மக்களது மனத்துன்பம் போக்காது
கோளும் கொடுங்கருத்தும் கொடுத்தவரை வளர்ப்பதுவேன்?

இனிது எதுவென்று இனிதாக உரைத்துள்ளேன்
புனிதப் பாதைதனைப் புரியவைத்துச் சென்றுள்ளேன்
மனித வாழ்வதுவின் மகத்துவங்கள் பகர்ந்துள்ளேன்
கனிவாய்க் கடைப்பிடிப்பீர் காலம்வெல்லக் கைகொடுப்பீர்.

1 Comments:

  • At 6:10 PM, Anonymous Anonymous said…

    புத்தர் பெருமானைப் பழிக்காமல் கவிதையைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள். -ஸ்ருதி

     

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது