p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Thursday, April 14, 2005

ஐயகோ தமிழா!

ஐயகோ தமிழாநீயும் மகிழ்கின்றாயோ?
ஆனந்தக் கூத்தாடித்தான் திரிகின்றாயோ?
கையைநீ விரித்தாயோசொல் தமிழுக்கின்று
காலனாய் வந்தாயோநீ கடமைதுறந்து
மெய்யைநீ அறியாதுமே தமிழைக்கொன்று
மலிந்திட்ட மொழிகளையெங்கும் மென்றுமென்று
ஐயகோ கதைப்பதுவேன் சொல்லுசொல்லு
அவனிதான் தங்குமோநீ நில்லுநில்லு

பிள்ளைகள் பெற்றதால்நீ பேறுகொண்டாய்
பெருமிதம் கொள்வாயவர்ட்கு தமிழையூட்டி
நல்லவ ராகயவர்கள் வளராவிட்டால்
நாடுதான் போற்றுமாநீ சொல்லுதமிழா!
வல்லவ ராகவேற்று மொழியில்மட்டும்
வருதல்தான் போதுமாநீ சிந்தித்தாயோ?
நல்லதாய் மொழியையறியாத் தமிழரென்று
தரணிதான் பழிக்கநீயும் வளர்க்கலாமோ?

ஆங்கிலம் கலந்துமேநீ தமிழைப்பேச
அகிலமே மதிக்குமென்று நினைக்கின்றாயோ?
தீங்கேதும் செய்யாச்செந் தமிழைநீயும்
தெளிவற்ற வானொலிபோற் பேசல்நன்றோ?
ஓங்கிடும் தமிழைநீயும் முதியோர்போல
ஒவ்வாது நடுங்கியேதான் ஓதல்நன்றோ?
தேங்கியே நிற்காநற் தமிழையெங்கும்
தெளித்திடு தெளித்திடுதமிழா அஃதும் நன்றாய்.

1 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது