p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Saturday, June 11, 2005

உண்ணியாய் மனிதன்

நாயினைப் பற்றிப் பிடித்தது உண்ணி
நன்றி செலுத்திடும் உயிரியென் றெண்ணி
தாயினைப் போன்று செலுத்துவேன் பாசம்
தாயகம் இதுவெனக் கொண்டது நேசம்

விரட்டி விரட்டிநாய் துரத்திய போதும்
விட்டிட வில்லை நட்புள்ள உண்ணி
முரட்டுத் தனமாக மோதிய போதும்
முத்தம் செலுத்தியே வந்தது உண்ணி

மோதல் தொடர்ந்து நடந்தது எனினும்
முறிவின்றி யிருந்தது உண்ணியின் அன்பு
காதல் வளர்ந்து கனிந்துமே இனித்தது
கடியினால் நாயோ உண்ணியைச் சினந்தது

சாலை ஓரத்தில் கிடந்தது நாயும்
சரிந்திட்ட மெய்யில் உயிரற்று இருந்தது
வேலை யற்ற உடலிது என்பதால்
வேறிடம் தேடிடக் கழன்றன உண்ணிகள்

ஈக்களோ நாய்க்காய் ஒப்பாரி யிட்டன
இரைந்தன புரண்டன புலம்பி யழுதன
பூக்களாய் அவைகள் மொய்த்துமே நின்றன
புழுக்களும் வந்து துக்கம் செலுத்தின

ஞாலத்தில் வாழ்ந்திடும் மனிதனும் இதற்கு
நல்லதோர் உதாரணம் ஆகுறான் பாரீர்
காலத்தின் கோலத்தால் நிகழ்ந்திடும் கருமத்தில்
சுயனல உண்ணியாய் மனிதனைக் காணலாம்

இருக்கும் போதே போற்றுவோர் ஒருவகை
இறந்த பின்னரே போற்றுவோர் ஒருவகை
தரணியில்ப் பிறக்கமுன் இகழ்பவர் ஒருவகை
தரணியைத் துறக்கமுன் இகழ்பவர் ஒருவகை

எதுஎது எப்படி நடந்திட்ட போதும்
அவர்களைத் திருத்திட நினைப்பது கடினம்
அதுஅவர் தாமே திருந்திட்டா லன்றி
அவரென்றும் மனிதராய் வாழ்ந்திடும் உண்ணி.

1 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது