p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Tuesday, August 31, 2004

அறிவியல்?

துயர் விளைந்திடும் அணு வெடித்தது
சோக மென்பது வாழ்க்கை யானது
புய லடித்தது புவி யதிர்ந்தது
பூமி யெங்கணும் புழுதி யானது
கயவர் நெஞ்சுபோல் இருள் நிறைந்தது
காலன் வாகன மணி யொலிக்குது
செய லிழந்தது வையகம்; எழில்
செத் தொழிந்தது கோர மானது

ஆக்கி யாக்கியே ஆசைப் பட்டவன்
அழிவை நோக்கியே தள்ளப் பட்டனன்
தாக்கு தற்கென வுறுதி பூண்டவன்
தா னழிந்துமே செத் தொழிந்தனன்
காக்கும் நல்மரம் வெட்டி வீழ்த்தினன்
கா டழிந்தது மழை குறைந்தது
நோக்க மின்றியே அழிவை நாடினன்
நோய் பிடித்துமே வாட லுற்றனன்

வாக னங்களின் ஒலி யொலிக்குது
வஞ்சம் தீர்த்திடும் புகை பெருகுது
மேகம் போன்றுமே அது திரண்டது
மேதி னிக்கிது தீமை தந்தது
தேகம் தீர்த்திடும் நோய்கள் வந்தன
தொடர்ந்து 'யூவி' கதிர்கள் வந்தன
வேக மாகவே மனிதன் சாகின்றான்
வெறுமை யாகவே உலகை யாக்கின்றான்

மழையு மின்றியே நாம் துடிப்பதா?
மண்ணிலே உயிர் மாண் டொழிவதா?
துளை களாகவே 'ஓசோன்' தேய்வதா?
தொல் கடல்நிலை மாறி நிற்பதா?
மலைகள் தாழுமா? அலைகள் ஓயுமா?
மானிடர் அழி வுற்று நிற்பரோ?
தலை வெடிக்குது அறிவியல்த் துறை
தரணி உய்திட வழி கொடுக்குமா?

(பூபாளராகங்கள் 2004)

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது